வரம் ஒன்று தா தாயே

இடுகையிட்டது dinesh வியாழன், 5 மார்ச், 2009
நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி
தவறவிட்ட எத்தனையோ
ஆசைகள் தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது

வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி
சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்
இருந்தும்...
சுயநலமில்லா உறவு

உங்களுக்காய் காத்திருக்கிறேன்
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!